ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள காப்புக்காட்டுப் பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நாயுடன் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடமாக மலைப்பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திய வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வேட்டை நாய் உதவியுடன் மலையையொட்டியுள்ள பகுதியில் சுற்றித் திரியும் முயல்களை வேட்டையாடுவதாகவும், வேட்டையாடும் முயல்களை இறைச்சிக்காக விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இருவரையும் வேட்டை நாயுடன் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த அன்புராஜ், கபில்தேவ் என்பதும், இவர்கள் கடந்த பல ஆண்டுகளாகவே வனப்பகுதிகளுக்குள் வேட்டை நாய் உதவியுடன் சென்று முயல்களை வேட்டையாடி விற்பனை செய்துவருவது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தொண்டி அருகே பறவைகளை வேட்டையாடியவருக்கு அபராதம்!