ஈரோடு: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அன்சர். இவர் கடந்த 14 ஆம் தேதி பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஜவுளி வாங்குவதற்காக காரில் தனது நண்பருடன் ஈரோடு நோக்கி வந்ததாகவும் பெருந்துறை அருகே ஏரி கருப்பராயன் கோயிலில் போலீஸ் போல் நடித்து நான்கு பேர் தன்னிடம் இருந்த ரூ.29 லட்சம் பணத்தை பறித்து சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் அன்சர் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை சோதனையிட்டனர். அப்போது அன்சர் பொய்யான புகார் அளித்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கேரளாவை சேர்ந்த அஷ்ரப் என்பவர் அன்சருக்கு கள்ள நோட்டுகளை வழங்குவதாக கூறி பெருந்துறைக்கு வரவழைத்தார். அங்கு மூன்று கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதாக வீடியோ ஒன்றை காட்டினார். அஷ்ரப்பின் ஆட்கள் 4 பேர் போலீஸ் போல் நடித்து அன்சரிடம் இருந்த ரூ.29 லட்சம் பணத்தை பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கோவையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை பிடித்தனர்.
கோவையை சேர்ந்த ஜனார்த்தனன், உதகையை சேர்ந்த மகாலட்சுமி மற்றும் கேரளாவை சேர்ந்த பஷீர், ஜலில், சுதிர் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும், கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் நிகழ்ந்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பெருந்துறை சரக காவல் துணை கண்காணிப்பாளர் கௌதம் கோயல் பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கில் மேலும் ஏழு பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு வெகுமதி வழங்க பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் பொய்யான புகார் அளித்த அன்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கௌதம் கோயல் தெரிவித்தார். இந்த கும்பல் ஏற்கனவே இரிடியம், தங்க பிஸ்கட் மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அதிக நேரம் போன் பேசியதற்காக மகளை கொன்ற தந்தை