ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லி, முல்லை, சம்பங்கிப் பூ வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சுமார் ஆயிரம் விவசாயிகள் சம்பங்கிப் பூவை நம்பியே வாழ்கின்றனர்.
தினந்தோறும் தோட்டத்தில் பறிக்கும் பூவை சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் சந்தையில் வியாபாரிகள் முன்னிலையில் ஏலம்விட்டு வருமானம் ஈட்டிவந்தனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பூச்சந்தை மூடப்பட்டது. இதனால் சாகுபடி செய்த பூ செடியிலேயே கருகியது. மல்லிகைப் பூவை விவசாயிகள் மாடுகளை விட்டு மேய்ச்சலில் ஈடுபடுத்தினர். மல்லிகைப் பூவை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காதபடி செண்ட் ஆலைகளில் உற்பத்தியைத் தொடங்க அனுமதியளித்தது. இதன்படி சத்தியமங்கலத்தில் சாகுபடிசெய்யப்பட்ட மல்லிகைப் பூ குறைந்த விலைக்கு செண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது.
அதே நேரத்தில் சம்பங்கிப் பூ விவசாயிகள் தினமும் 20 டன் பூவை உற்பத்தி செய்யும்போது அதில் நான்கு டன் மட்டுமே செண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இதன் காரணமாக சம்பங்கிப்பூ விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த 16 டன் பூவை ஏரி, குளம், குட்டைகளில் கொட்டுகின்றனர். சிலர் பூவைப் பறித்து நிலத்திலேயே உரமாக விடுகின்றனர்.
சீசனில் ரூ.100-க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூ இன்று விலைபோகாத நிலையில் அப்படியே வீணாவது கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சில விவசாயிகள் பூவை கூலி கொடுத்து அதைப் பறித்து கொட்டுகின்றனர். தற்போது வருமானம் இன்றி விவசாயிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மூன்றாவது ஊரடங்கை நீடிக்கும்போது சம்பங்கிப் பூ விவசாயிகளின் நிலை மேலும் சிரமத்துக்குள்ளாகும். எனவே ஊரடங்கு நீடிக்கும்வரை மாதம் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... சத்தியமங்கலத்தில் 16 டன் பூவை கீழே கொட்டும் அவலம்!