திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா, நண்பர்களான வேலுச்சாமி, மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த குட்டி மணி ஆகிய 5 பேர் கடந்த மார்ச் மாதம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை சந்தித்துள்ளனர். அவரிடம் ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். இதில் ரூ.2.80 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் வரை கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை பேசியுள்ளார். இதை உண்மை என்று நினைத்து, கங்காதரன் அவர்களிடம் ரூ.2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள், அதன் பின்னர் தராமல் இழுத்தடித்துள்ளனர்.
இதனால் நிறுவனம் குறித்து கங்காதரன் விசாரித்தபோது பெயரளவிற்கு ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறியவர்கள், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்து அரசை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கங்காதரன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ராஜதுரை உட்பட 5 பேரும் கங்காதரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனையடுத்து, கங்காதரன் மற்றும் பணத்தை இழந்த பல முதலீட்டாளர்கள் சுமார் 20 பேர் கோபி காவல் நிலையத்தில் ராஜதுரை உள்ளிட்ட 5 பேர் மீதும் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்காதரன், ”ராஜதுரை உள்ளிட்ட 5 பேரும் போலியான இணையத்தை உருவாக்கி, இந்தியா முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்துள்ளதாக கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து நிறுவன உரிமையாளர்களான ராஜதுரை அவரது மனைவி ஸ்வேதா ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் என் மீது கொலை மிரட்டல் விடுத்தனர்” என்றார்.
இதையும் படிங்க: 'முதலமைச்சர் தொகுதி மிகவும் அபாயகரமானது' - மக்களை அச்சுறுத்திய பதாகை