ஈரோடு& திருச்சி: தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறுவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதனடிப்படையில் இன்று முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஈரோடு
சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 வயதைக் கடந்த முதியோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர். மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர் பூஸ்டர் போட்டுக்கொண்டனர்.
273 நாள்கள் அல்லது 39 வாரங்கள் நிறைவுபெற்ற முன்களப் பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. முன்னர் செலுத்திய அதே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருச்சி: கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. திருச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியைத் தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சிவராசு, "திருச்சி மாவட்டத்தில் 36,760 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியான நபர்களாக இருக்கின்றனர். திருச்சியில் ஏழு சிறப்பு கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 2185 படுக்கை வசதிகள் உள்ளன. இது தவிர அரசு, தனியார் மருத்துவமனைகளில் 6397 படுக்கை வசதிகள் இருக்கின்றன.
மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியாக 88 விழுக்காட்டினரும் இரண்டாம் தவணை தடுப்பூசி 58 விழுக்காட்டினரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதேபோல 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 400. இதில் முதல் தவணையாக ஒரு லட்சத்து ஆயிரத்து 980 பேர் என 80.7 விழுக்காட்டினர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
திருச்சியில் போதிய ஆக்சிஜன்
திருச்சி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதி போதுமான அளவு இருக்கிறது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விநியோகிக்கும் வகையில் போதுமான அளவு ஆக்சிஜன் இருக்கிறது. தினமும் 6000 கரோனா மாதிரிகள் வரை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
நேற்று 3000-க்கும் அதிகமான மாதிரிகளை எடுத்துள்ளோம். ஒமைக்ரான் மட்டுமல்ல டெல்டா வகையும் பரவிவருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் இந்த அலையில் 3000 முதல் 4000 வரை பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு அலைகளில் கட்டுக்குள் இருந்த கரோனா
மக்கள் முகக் கவசம் அணிவதையும், தகுந்த இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது கரோனா பாதிப்புகள் அதிகமாவதைத் தடுக்கலாம்.
கடந்த இரண்டு அலைகளில் திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருந்தது. அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம். இந்த முறையும் அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் Random Test எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: மண்பாண்டங்களை மறந்த மண்ணின் மைந்தர்கள்: மாறிவரும் பண்பாடு?