ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர், தனது நண்பர்களுடன் கடந்த 23ஆம் தேதி இரவு, அவிநாசி பைபாஸ் ரோட்டில், கொடுமுடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில், அவரது காரை வழிமறித்த மற்றொரு காரில் வந்த சிலர், தட்சிணாமூர்த்தியின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த அவிநாசி காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்து முதல்கட்டமாக காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில் குற்றவாளிகள் பயன்படுத்தியது எலிபண்ட் கிரே கலர் ஸ்பிப்ட் கார் என்பதும், அதன் பக்கவாட்டில் ஸ்டார் போன்ற லோகோ ஒட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த அடையாளத்தை வைத்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அவிநாசியை அடுத்து செங்காளிபாளையம் அருகே இந்தக் கார் வருவதை கண்டறிந்த காவலர்கள் உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து, அவிநாசி காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான காவலர்கள் கோவை - சேலம் ஆறுவழிச்சாலையில் காரை விரட்டிச்சென்று தடுத்து நிறுத்தினர். மேலும், காரிலிருந்த மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர்கள் திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற முகமது சபி (வயது 29), பல்லடம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 30), திருப்பூர் கே.என்.பி.காலனி பகுதியைச் சேர்ந்த மர்ஜூத் (வயது 30) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
மேலும், திருப்பூரை நோக்கி காரில் செல்லும்போது, தங்களை முந்திச் சென்ற காரிலிருந்த நபர் கையை நீட்டி வழிவிடக் கூறியதால் ஆத்திரமடைந்து அந்தக் காரை தடுத்து நிறுத்தியதாகவும், தொடர்ந்து காரில் அமர்ந்திருந்த தட்சணாமூர்த்தியின் கையை மனோஜ் பிடித்துக்கொள்ள, மர்ஜூத் அரிவாளை எடுத்துக் கொடுக்க மதன் (எ) முகமது சபி அவரது கையை வெட்டியதாகவும் கூறியுள்ளனர்.
இவ்வழக்கில் முதல் குற்றவாளியான முகமது சபி மீது ஏற்கனவே திருப்பூர், பல்லடம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கொலை மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளதாகவும், மனோஜ் மீது ஆறுக்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் அரிவாளைப் பறிமுதல் செய்தனர்.