ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 60- வார்டுகளிலும் பாதாள சாக்கடை, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம், மின் கேபிள் அமைக்கும் பணிகள் என பல்வேறு திட்ட பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவருகின்றன. இதற்காக மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பிலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலையில் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்த ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் தனசேகரன் அருகே உள்ள கட்டடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மண் வெட்டியை வாங்கி தானே களத்தில் இறங்கி பள்ளத்தை சீர் படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இதனை அப்பகுதியில் இருந்த சிலர் தங்களது செல்ஃபோனில் பதிவு செய்து சமூக வளைதலங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் தனசேகரனுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் சாலையில் இருந்த சிறு பள்ளங்களை போக்குவரத்து காவலர் ஒருவர் சீரமைக்கும் செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் அதேபோன்று ஒரு போக்குவரத்து காவல் அலுவலர் பொறுப்புடன் செயல்பட்டிருப்பது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க: சொந்த செலவில் சாலையைச் சீரமைக்கும் போக்குவரத்துக் காவலர்!