ஈரோடு: தாளவாடி மலை பகுதியிலுள்ள கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளி, லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் அழுகி, விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தக்காளி வரத்து குறைந்து கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மழை குறைந்து தற்போது தக்காளி விளைச்சள் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி கொள்முதல் விலை கிலோ ரூ.12-யாக குறைந்தது. இதன் காரணமாக மார்க்கெட், வாரச்சந்தை மற்றும் கடைகளில் தக்காளி விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட் மற்றும் வாரச் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி கொள்முதல் விலை குறைந்தும் மார்க்கெட் மற்றும் வார சந்தைகளில் தக்காளி விலை குறையாததால், பொதுமக்கள் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.