அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் தாளவாடி மலைப்பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது,
மத்திய அரசுக்கு பயந்து தான் தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தேசியக் கட்சிகள் தென்னகத்தில் தமிழகத்துக்கு எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறுகின்றன.
அதிமுகவில் இருக்கும் செம்மலை ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தற்போது அவர் நடித்து வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கினார். நான் நினைத்திருந்தால், சசிகலா அவர்கள் நினைத்திருந்தால் நான் எப்போதோ முதலமைச்சர் ஆகியிருப்பேன். பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கி அழகு பார்த்தோம். ஆனால் அவர் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார், என்று அவர் தெரிவித்தார்.