தமிழ்நாடு - கர்நாடக எல்லையான தாளவாடி அருகே ஒண்ணஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று சிறுத்தை ஒன்று காயங்களுடன் நடக்க முடியாமல் சுற்றி திரிந்தது. இதை பார்த்த கிராம மக்கள் சிறுத்தை துரத்த முயன்றனர். ஆனால் சிறுத்தை காயமடைந்துள்ளதால், பொதுமக்களுக்கு பயந்து அந்த பகுதியில் வாய்க்காலில் தஞ்சம் அடைந்தது. இதையறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் சிறுத்தை காண ஒண்ணஹள்ளி கிராமத்தில் கூடினர்.
கூட்டம் கூடியதையடுத்து அங்கிருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக மாநில வனத்துறையினர், தலையில் பலத்த காயங்களுடன் சுற்றி திரிந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மைசூரு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து கர்நாடக வனத்துறையினர் கூறுகையில், "சிறுத்தைகளிடையே ஏற்பட்ட மோதலில் இந்த 5 வயதுள்ள ஆண் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. உரிய சிகிச்சை அளித்து குணமான பின் மீண்டும் வனப்பகுதியில் விடப்படும்" என்றனர்.