தமிழ்நாட்டில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழு என்ற புழு தாக்கியதில் கடந்தாண்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இப்புழு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தாகவும் இதனை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், மக்காச்சோளம் பயிர் செய்திருந்த விவசாயிகள் மிகவும் கவலையுற்றிருந்தனர்.இந்தச்சூழலில் தமிழ்நாடு அரசு மக்காசோளத்தைத் தாக்கி அழிக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அதன்படி தற்போது படைப்புழுவை கட்டுப்படுத்த புதிய பூச்சிக்கொல்லி மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த படைப்புழுவை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாகத் தமிழ்நாடு அரசு, ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு படைப்புழுவை கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை இலவசமாக வழங்குவதோடு, மருந்து தெளிக்க பயன்படுத்தும் தெளிப்பான் மற்றும் ஆள் கூலி ஆகியவற்றையும் வழங்கிவருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர் கிராமத்தில் தர்மராஜ் என்ற விவசாயி நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளத்தை தாக்கியுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்தும் செயல்முறை விளக்கம் வேளாண்துறையின் சார்பில் அப்பகுதி விவசாயிகளுக்குச் செய்து காண்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இலங்கைத் தமிழர் திருச்சி சிறையில் உண்ணாவிரதம்!