திருப்பூர் மாவட்டம், பாப்பினி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய மகள் மஞ்சு என்கிற பெரியநாயகி (17). இவர் காங்கயம் அருகில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மஞ்சுவும் அவருடைய தாத்தா பொன்னுசாமியும் (67) சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மொபட்டில் சென்றனர். அப்போது சென்னிமலையில் உள்ள தெற்கு ராஜ வீதியில் வலதுபுறம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தபோது, பின்னால் பெருந்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த கிரசர் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி இவர்கள் மீது மோதியது.
இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி மஞ்சு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில், முதியவர் பொன்னுசாமிக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பொன்னுசாமி பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மஞ்சுவின் சடலத்தைக் கைப்பற்றிய சென்னிமலை காவல்துறையினர் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, டிப்பர் லாரியை ஓட்டி சென்ற வைரமங்களத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரை (30) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள், சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் மற்றும் மினி லாரிகள் அதிக லோடு ஏற்றி, அதிவேகத்தில் செல்கிறது. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.