ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாளவாடியை அடுத்த ஜீரஹள்ளி வனப்பகுதியில் சிறுத்தை, புலிகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த 7 வயதுள்ள புலி, சிமிட்டஹள்ளி கிராமத்துக்குள் புகுந்தது.
பின்னர் அங்குள்ள மனோஜ், பழனிச்சாமி எனபவர்களின் விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு புதர்மறைவில் தஞ்சம் அடைந்தது.
இதையடுத்து மனோஜ், பழனிச்சாமி புலி நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் மழை பெய்ததால் நீண்ட நேரமாக புதரிலேயே காத்திருந்த புலி, விவசாய நிலங்கள் வழியாக ஓடை, பள்ளம் ஆகியவற்றைக் கடந்து தொட்டமுதுகரை வனத்துக்குள் சென்றடைந்தது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் குமளி வெங்கட் கூறுகையில், "புலி இரவுநேரத்தில் வேட்டையாடும் பழக்கம் உள்ளதால் வனத்தில் இருந்து வழிதவறி கிராமத்துக்குள் புகுந்துவிட்டது. பகல்நேரத்தில் மனிதர்கள் நடமாட்டத்தால் அது பதுங்கியிருந்தது. இரவு நேரத்தில் புலி தானாகவே அதன் வழக்கமான வழித்தடத்தில் வனப்பகுதிக்கு சென்றடைந்தது. புலி நடமாடத்தால் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார். புலி நடமாட்டத்தால் பீதியில் இருந்த கிராம மக்கள், அது காட்டுகள் சென்றதையடுத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.