நினைவாற்றால் என்பது மனித குலத்திற்கு மிகவும் முக்கியமானது. ஒருமுறை செய்யும் தவறை மறுமுறை மேற்கொள்ளாமல் மனிதர்களை பாதுகாப்பது நினைவாற்றால்தான்!
நம் நாட்டில் நினைவாற்றலும், மனப்பாடமுமே ஒரு காலத்தில் கல்வி முறையாகவும் அறிவை அளவிடும் முறையாகவும் இருந்தது. ஆனால், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளும் படித்து இக்கலையில் சிறப்புற தொடங்கியதால், மனப்பாடம் முறை மீது பரவலாக விமர்சனம் எழுந்தது. மனப்பாடம் செய்ய அடிப்படை தேவையாக இருந்த நினைவாற்றல் கலை குறித்தும் திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், நினைவாற்றால் என்பதுதான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை எடுத்துக்காட்டும் வகையில், கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை அற்புத சாதனையை படைத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த பிரதிபா-இளமாறன் தம்பதியின் மூன்று வயது மகள் ப்ரவ்யா சாய். பேச தொடங்கியது முதலே பல விதமாக பொருள்களின் பெயர்களையும் குழந்தை பாடல்களையும், தனது மழலைக் குரலில் பாடி அசத்துவார் ப்ரவ்யா சாய்!
இவரது அபார ஞாபக சக்தியைக் கண்ட அவரது பெற்றோர், இதற்கு தனி பயிற்சியையும் அளிக்கத் தொடங்கினர். இதன் மூலம் குழந்தையின் ஒப்புவித்தல், நினைவாற்றல் திறமைகளை பெற்றோரால் வெளிகொண்டுவர முடிந்தது.
ப்ரவ்யா சாயின் நினைவாற்றால் குறித்த செய்திகள் சமூகவலைதளங்களில் பரவ, உலக சாதனை ஆய்வு மையத்தினர் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள குழந்தையின் வீட்டிற்கே நேரில் வந்து அவரது நினைவாற்றலை பரிசோதித்தனர்.
அப்போது குறைந்த நேரத்தில் அதிக பொருள்களின் பெயர்களை விளையாடிக்கொண்டே அடையாளம் கண்டு, அவற்றின் பெயரை குழந்தை சரியாக கூறியது, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குழந்தையின் நினைவாற்றலை அங்கீகரித்த உலக சாதனை ஆய்வு மையத்தினர், குழந்தைக்கு பதக்கத்தையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு