ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பொன்னம்பாளையம் பகுதியில் சோமசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.
இந்தக் குடோனின்கீழ் தளத்தில் குட்கா பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினர் குடோனில் சோதனைசெய்தனர்.
அப்போது குடோனில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பதுக்கிவைக்கப்பட்ட குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் 45 மூட்டைகளை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
மேலும் குட்கா பொருள்களை வாங்கவந்த கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் ஜீவா நகரைச் சேர்ந்த அன்பழகன், பூலுவபாளையத்தைச் சேர்ந்த கார்த்தி, சிவக்குமார் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
![Three people](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-05-sathy-kutka-seized-vis-tn10009_11022021222756_1102f_1613062676_821.jpg)
இந்த விசாரணையில், கர்நாடக மாநிலத்திலிருந்து குட்கா பொருள்களை வாங்கிவந்து இங்கு பதுக்கிவைத்து ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைசெய்தது தெரியவந்தது.
இதனையடுத்து குட்கா கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல்செய்து மூவரையும் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!