சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாயைப் பிரிந்த பெண் குட்டியானை ஒன்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், குட்டியானையை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி குட்டியானை ஆசனூர் வனப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சோகமாக சுற்றித் திரிந்ததைக்கண்ட வனத்துறையினர், அதனை மீட்டு பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டு சென்றனர்.
குட்டியானையை பரிசோதித்த வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன், 'மூன்று மாதமான பெண் குட்டியானை தாயை பிரிந்ததால் மற்ற யானைகள் இந்த குட்டியானையை சேர்க்காது' என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த குட்டியானையை பராமரித்து வரும் வனத்துறையினர் செல்லமாக அம்மு என அழைத்துவருகின்றனர். தினமும் 15 லிட்டர் லேக்டோஜென் பாலை குட்டியானைக்கு உணவாக வழங்குகின்றனர் .
குட்டியானை ஜாலியாக வன கால்நடை மையத்தில் சுற்றிவருவதை அப்பகுதி மக்கள் புகைப்படம் எடுத்து ரசித்து வருகின்றனர். விரைவில் இந்த பெண் குட்டியானை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்படவுள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மேக தாதுவில் அணை கட்ட முடியாது' - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்!