உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக பெருந்துறையில் கட்சி நிர்வாகிகளுடன் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுவரும் சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சென்று உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி பெறுவோம்.
நடிகர் ரஜினிகாந்த் கருத்துபடி, தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் இல்லை. அதிமுகவின் தலைமையை ஏற்று சிறப்பாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்று கொண்டனர். அவருக்கு பக்க பலமாக ஓபிஎஸ் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
அமைச்சரவையில் எனக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து எனக்கு தெரியாது. அது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்வதுதான் என்னுடைய இலக்கு. தேர்தல் சமயங்களில் சிறப்பாக பணியாற்றுபவர்களைப் பார்த்து மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவிகளை ஜெயலலலிதா வழங்குவார். அதே வழியில் எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவார்” என்றார்.
முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்ற முறையில் காற்று மாசு குறித்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், பனிக்காலம் வரும் போதெல்லாம் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமானது என்றார்.
இதையும் படிங்க: நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சிறப்பு கழிப்பறை: அமைச்சர் வேலுமணி தகவல்