ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காசிபாளையத்தில் இஸ்லாமியர்கள் வழிபடும் பழமையான தர்காவில் பூட்டையுடைத்து நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்ததோடு, சிசிடிவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
கரோனா ஊரடங்கால் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்த தர்கா, தளர்வு வழங்கப்பட்டதற்குப் பின்னர் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.
நேற்றிரவு (நவ.16) வழக்கம்போல் வழிபாடுகளை முடித்து வீடு திரும்பிய தர்கா நிர்வாகிகள், இன்று (நவ.17) காலை தர்காவைத் திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தர்காவின் உள்ளேயிருந்த உண்டியல் உடைக்கப்பட்டதுடன் சிசிடிவிகளும் சேதமடைந்திருந்தன. இது குறித்து மற்ற நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கொடுமுடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்துவந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் தர்காவின் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட காணிக்கைப் பணம் இருந்திருக்கலாம் என்றும், அது திருடுபோனதும் தெரியவந்தது.
தொடர்ந்து கைரேகை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:பழனியில் இடத்தகராறில் துப்பாக்கிச் சூடு: முதியவர் உயிரிழப்பு, திரையரங்கு உரிமையாளர் மீது கொலை வழக்கு!