ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் இருபத்து ஏழு கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி கிரானைட் கற்கள் ஏற்றியவாறு திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த லாரி, பதிமூன்றாவது வளைவில் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென பழுதாகி நின்றது.
தொடர்ந்து, லாரியை அப்புறப்படுத்தி ஓரமாக நிறுத்துவதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், ஏற்கனவே சாயும் நிலையில் இருந்த லாரி, அப்புறப்படுத்தும் பணியின்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சத்தியமங்கலம்-மைசூர் செல்லும் சாலை இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அவ்வழியே பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் கடும் நெரிசலில் சிக்கித் தவித்தனர். இது குறித்து அறியாத கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வெளியூர் பயணிகளும் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் மணிக்கணக்கில் பேருந்துக்காக காத்திருந்தனர். பேருந்தில் பயணிக்க முடியாததால் வேறு வழியின்றி வாடகைக்கு கார் எடுத்து செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
சுமார் பத்து மணி நேர போராட்டத்துக்குப் பிறகே போக்குவரத்து சரி செய்யப்பட்டு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : டிடிவி-யின் மிமிக்கிரி முதல் அமைச்சர் காமராஜின் கண்ணீர் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்