ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கியில் நகைக்கடன் பெற அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் வங்கி முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சி பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில், வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி, பெண்கள் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, கூட்டுறவுச் சங்கங்களில் ஆறு சவரனுக்கும் குறைவான நகைக்கடன்களும் தள்ளுபடி என்ன முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
தற்போது நகைக்கடன் பெற்றால் அடுத்து ஆட்சி அமைக்கும் ஆளும் அரசு, அனைத்து வங்கிகளிலும் நகைக்கடன் தள்ளுபடி செய்யும் என வதந்தி பரவியதால், அப்பகுதி பொதுமக்கள் நகைக்கடன் பெற வங்கி முன்பு குவிந்தனர்.
வங்கியில் நாள் ஒன்றுக்கு 40 நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால் முதலில் வந்த 40 நபர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகித்து வங்கி நிர்வாகம் நகைக்கடன்களை வழங்கிவருகிறது.
அதனால் மற்றவர்கள் வங்கி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி வரிசையில் நிற்கவைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.