இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் சார்பில் கரோனா பாதிப்புக்கு அரசு கட்டணத்தில் உயர் சிகிச்சை வழங்கிடும் வகையிலான கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தின் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று (செப். 20) நடைபெற்றது. கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ் மாநிலத் தலைவர் மருத்துவர் சி.என்.ராஜா தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் முதன்முறையாக ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் கரோனாவுக்கு என தனி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. கரோனாவால் தற்போது வரை அகில இந்திய அளவில் 370 மருத்துவர்களும், தமிழ்நாட்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.
கரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் வழிவகுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்திட இந்திய மருத்துவ சங்கம் துணை நிற்கும். தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சை வழங்கிட அரசு எவ்வித நிபந்தனையுமின்றி அனுமதி வழங்கி வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் 400 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் இறந்த உதவி ஆய்வாளரின் படத்திற்கு காவல் ஆணையர் அஞ்சலி!