மாதம்தோரும் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. இதில் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. மற்ற மாதங்களில் விரதம் இருந்து திதி கொடுக்க இயலாத பக்தர்கள் அனைவரும் தை மாதத்தில் வரும் அமாவாசையில் விரதமிருந்து முதாதையர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
மேலும் தை அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்பணம் செய்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால், தை அமாவாசையான இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் விரதமிருந்து முதாதையர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
ஈரோடு: பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்திற்கு அடுத்தப்படியாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க புகழ்பெற்ற இடமாக இது திகழ்கிறது. தை அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி, தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபாடு நடத்தினர்.
மேலும் காய்கறிகளை வைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடும் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
நாகை: காசியை விட 16 மடங்கு புண்ணியம் தரும் வேளாங்கண்ணியை அடுத்த காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து கடலில் புனித நீராடினர்.
மேலும் முன்னோர்களுக்கு பிடித்த காய்கறி மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம், யாகம் செய்து திதி கொடுத்தனர்.
திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில், கங்கையின் புனிதமாக கருதப்படும் புனித காவிரி ஆற்றில் நீராடினர். பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.
இதில் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் ஸ்ரீரங்கம், திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர். இதேபோன்று அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள படித்துறைகளில் பொதுமக்கள் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இதையும் படிங்க: பெரியார் சிலை உடைப்பு: காஞ்சியில் பரபரப்பு!