ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 181 பேருக்கு நலத்திட்ட உதவிகள், இருசக்கர வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ், 145 மாற்றுத்திறனாளிகள் உட்பட 181பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்களும், தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதில் சில கடைகள் மூடப்பட்டது தவறு என்று சில கூறிவருவதாகவும், இதனிடையே மேலும் மூடப்பட வேண்டிய சில டாஸ்மாக் மதுக்கடைகள் விடுபட்டுவிட்டதாகவும் சிலர் கூறிவருவதாக அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தகவல் சேகரிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு 500 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பட்ட நிலையில், அக்கடைகளால் அரசுக்கு போதிய வருமானம் இல்லையென்பதால் தான் அவைகள் மூடப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த மாதிரி கணக்கில் இல்லை என்றும், பொதுமக்களின் கருத்துகளை அடிப்படையாக கொண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், குறிப்பாக பள்ளிக்கூடத்தின் அருகில் இருந்த கடைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு மேல ரூ.10 அதிகம் - டாஸ்மாக் சூப்பர்வைசர் வீடியோ வைரல்
இந்த நடவடிக்கைகளுக்காக பல நாட்களாக ஆய்வு பணிகள் மேற்கோண்ட நிலையில்தான், நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் முத்துசாமி கூறினார். மேலும், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுகிறது. மேலும், அதிக புகார் வந்தால் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிப்பது சாதாரணமான விசயம் என்றும் அவர்கள் தெரிவிப்பும் அனைத்தும் உண்மை என நினைக்க முடியுமா? என்றார்.
இதையும் படிங்க: 500 மதுக்கடைகள் மூடப்பட்டது ஏன்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
அவ்வப்போது, சில இடத்தில் தவறு நடந்துள்ளதை அனைத்து இடங்களிலும் நடந்துள்ளதாக சித்தரிப்பதாகவும், இது தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை கூட்ட செல்லவில்லையே தவிர அங்குள்ள கஷ்டத்தை பார்க்க நேரில் சென்று ஆய்வு செய்துள்ளதாக கூறினார்.
மது விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை; அவை குறையவேண்டும் என நினைக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை : பயனாளர்கள் யார்?