ஈரோடு: பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கால்கோள் போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஆர் ஈஸ்வரன் கலந்து கொண்டு கால்கோள் நாட்டினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஆர் ஈஸ்வரன், “கொங்கு மண்டலத்தில் உள்ள மக்களின் பல வருடப் பிரச்சனைகள் தொழில் வளர்ச்சி மற்றும் அவற்றின் மீதான கோரிக்கை உள்ளிட்டவற்றை உள்ளடக்கி இந்த மாநாடு நடைபெறுவதாகக் கூறினார்.
இந்த மாநாட்டையொட்டி வள்ளி கும்மியாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஆயிரம் பேர் பங்கேற்கக்கூடிய வள்ளி கும்மியாட்ட உலக சாதனை நிகழ்த்தப்பட இருப்பதாகக் கூறிய ஈஸ்வரன்,
வள்ளி கும்மியாட்டம் மூலம் பெண் குழந்தைகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பெண்கள் மத்தியில் உள்ள தயக்கத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கொங்கு மண்டலத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட ஏராளமானவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்ல இருக்கிறேன். துணைவேந்தர் மீதான பிசிஆர் வழக்கில் நீதிமன்றம் மூலம் சரியான தீர்ப்பு வரும்.
தமிழ்நாட்டில் விசாரணை அமைப்புகளை வைத்து விவசாயிகளை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு ஆளுநருடனான இணக்கமான சூழல் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து இணக்கமான சூழல் நிகழ்ந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் விவசாயி காட்டு யானை தாக்கி உயிரிழப்பு.. ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம்!