பாஜக சார்பில் கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரை, அரசின் தடையை மீறி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது.
ஈரோட்டில் இன்று (நவ.20) வேல் யாத்திரை நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார். அதற்காக ஈரோடு வருகைதந்த எல். முருகன் கந்த சஷ்டி தினத்தை முன்னிட்டு, சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
பின்னர் அவர் வேல் உடன் கோயிலிலிருந்து வந்தார். அவரை பாஜக தொண்டர்கள் பூக்களைத் தூவி வரவேற்றனர். தொடர்ந்து பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் எல். முருகன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக வேல் யாத்திரை நடத்துகிறோம்.
வேல் யாத்திரையின் மூலம் தமிழ்நாட்டில் தாமரை மலருவதற்கான வாய்ப்பு ஏற்படும். வேல் யாத்திரை எவ்விதத் தடைகள் இன்றி திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் மாதம் 7ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும்" என்றார்.
பொதுக்கூட்டத்தின்போது தொடர்ந்து வேல் யாத்திரை முழக்கங்கள் எழுப்பப்பட்டு கொண்டே இருந்தன. அரசின் தடையை மீறி வேல் யாத்திரையைத் தொடர்வதாகக் கூறி, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்ட 1000 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: இளைஞர்களின் கட்சி பாஜக - எல்.முருகன்