ஈரோடு: அரச்சலூர் பகுதியில் உள்ள 9 வருவாய் கிராமங்களில் விவசாயிகள் பயிரிடும் கரும்புகளைக் கடந்த 30 ஆண்டுகளாக புகளூரில் உள்ள ஈஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், பாரி சர்க்கரை ஆலையின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கிராமங்களையும் சக்தி சர்க்கரை ஆலையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றி சர்க்கரை கட்டுப்பாட்டு ஆணையர் உத்தரவிட்டார்.
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலும், விருப்பத்திற்கு மாறாகவும் கரும்பு வெட்டுவதற்கான உரிமையை வேறொரு சர்க்கரை ஆலைக்கு மாற்றுவதை எதிர்த்து திரளான விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
பின்னர் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனர். கரும்பு வெட்டியதும் உரிய நேரத்தில் பணம் வழங்குவதுடன், மானிய தொகையும் விவசாயிகளுக்குப் பாரி ஆலை வழங்கி வரும் நிலையில், மாதக்கணக்கில் நிலுவைத் தொகை வைத்திருக்கும் புகாருக்கு ஆளான வேறொரு ஆலைக்கு தங்களின் கரும்பு வெட்டும் உரிமையை மாற்றக்கூடாது என வலியுறுத்தினர்.
தங்களின் வாழ்வாதார பிரச்சனையாக உள்ள இதில் அரசு தலையிட்டு எப்போதும் போலக் கரும்பு வெட்டும் உரிமையைப் பழைய படி பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 'வாக்காளர்களை கவர ஹைதராபாத் பிரியாணி' - ஏஐஎம்ஐஎம் கட்சியின் புதிய முயற்சி!