ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியம். இவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து அதில் பட்டுப் புழு உற்பத்தி செய்யும் மையத்தை கடந்த 15 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் தனது தோட்டத்தின் வேறு பகுதியில் பாலசுப்பிரமணியம் வேலைசெய்து கொண்டிருந்தபோது, அவரது பட்டுப்புழு கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதையடுத்து புகை மூட்டம் வருவதைக் கண்ட பாலசுப்பிரமணியம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால், கொட்டகையின் மேற்கூரையில் தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் பட்டுப்புழு உற்பத்தி பொருள்கள் அடங்கிய கொட்டகை உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் முழுவதுமாக தீயில் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க... தேனி வனப்பகுதியில் காட்டுத் தீ - அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்