ஈரோடு: தமிழ்நாட்டில் அச்சப்படும் அளவிற்கு கரோனா பரவல் இல்லை என்றாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சு.முத்துசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் எந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்; போதுமான அளவிற்கு படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த முறை ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக திடீர் பின்னடைவு ஏற்பட்டதைத் தவிர்க்க, தற்பொழுது அதையும் எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.
அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகவும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாங்களாக முன்வந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தடுப்பூசி இரண்டாம் தவணை போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், ஈரோடு மாவட்டத்தில் 16 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் கூறிய அவர், இரண்டு தவணை முடித்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும் பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் முத்துசாமி உறுதிபட தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ரயில்வே, அஞ்சல் துறையின் முதல்சேவை: சென்னைக்கு சென்ற 300 கிலோ ஏலக்காய்!