ஈரோடு மாவட்டம் தலமலை ஊராட்சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை மலை கிராமங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமங்களுக்கு பெஜலட்டியில் இருந்து தடசலட்டி வரை 4 கி.மீ தூரம் செல்லும் மண் பாதை மட்டுமே உள்ள நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கபட்டுவருகின்றன.
இந்தப் பேருந்தின் மூலமாகவே தடசலட்டி, இட்டரை கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பெஜலட்டியில் உள்ள பள்ளிக்கு வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த மலை கிராமத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்துவருவதால் வந்து கொண்டிருந்த பேருந்தும் மண்ணில் சிக்கிக்கொள்கிறது.
இதனால் இப்பாதை வழியாக கடந்த ஒரு வாரமாக பேருந்து வரவில்லை. எனவே வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் 4 கி.மீ தூரம் பெஜலட்டியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு நடந்தே செல்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மண் பாதையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.