ஈரோடு மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”மத்தியில் ஆளும் பாசிச, சர்வாதிகார பாஜக ஆட்சியை அகற்றவே தற்போது மக்களவைத் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு மட்டும் வந்து போகிறவர்கள் அல்ல நாங்கள்; ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து உங்களைச் சந்திக்ககூடியவர்கள்
திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருக்கிறது. தமிழ்நாடு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கை இது. வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திமுக தேர்தல் அறிவிப்புகளைப் பார்த்த சில அறிவுஜீவிகள் இவற்றையெல்லாம் நிறைவேற்றமுடியாது என்றனர். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஸ்டாலின், பிரதமராகப் போகிறாரா என்று கேள்வி கேட்டுள்ளனர்.
மத்தியில் நாம் கை காட்டக்கூடிய ஆட்சி அமைந்து, ராகுல் காந்தி பிரதமராக அமரப்போகிறார். திமுக சொன்னதை காங்கிரஸ் ஏற்குமா என்று கேட்டவர்களுக்கு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மூலம் ராகுல் பதில் சொல்லி இருக்கிறார். நாங்கள் சொன்னதை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட ராகுலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பயந்துபோன பிரதமர் மோடி, பொய் அறிக்கை எனச் சொல்லியுள்ளார். எதற்கெடுத்தாலும் பொய் சொல்பவராக மோடி இருக்கிறார். கடந்த தேர்தலில் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று வாக்குறுதி அளித்தார். வங்கியில் பணம் போடாவிட்டாலும் பரவாயில்லை. கருப்புப்பணத்தையாவது அவர் மீட்டாரா? கறுப்புப் பணத்தை மீட்பதாகச் சொல்லிவிட்டு, 1000, 500 ரூபாய்களை மதிப்பிழக்கச் செய்து நல்ல நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தார்.
துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை என்ற பெயரில் அவரை பரப்புரை செய்யவிடாமல் முடக்கியுள்ளனர். இதன்மூலம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய நினைக்கின்றனர். இந்த தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் இடைத்தேர்தலை நிறுத்திவிட்டால் ஆட்சியைக் காப்பாற்றி விடலாம் என நினைக்கின்றனர். அதற்காகத்தான் வருமானவரிச் சோதனை என்ற பெயரில் மிரட்டுகின்றனர்” என்றார்.