பள்ளிக்கூடத்திற்குச் சீக்கிரமாக சென்றால் அங்கிருக்கும் செடிகளைக் கவனித்துக் கொள்வது மௌனேஷின் அன்றாட வேலைகளில் ஒன்றானது. சில தருணங்களில் வகுப்பிற்கு மிகவும் தாமதமாகவும் வருவார். இது குறித்து ஆசிரியர் ஒரு நாள் மௌனேஷிடம் கேட்கவே, அதற்கு வீட்டில் தான் விவசாயப் பணிகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார். பத்து வயதில் விவசாயம் செய்கிறானா? ஆசிரியர் கொஞ்சம் ஆடித்தான் போனார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர், மெளனேஷ். இவர் கால்நடைகளை மேய்ப்பது, அவற்றிற்குத் தீவனம் கொடுப்பது, காய்கறிகளைப் பயிரிடுவது என தனது தந்தைக்கு உதவியாக இருப்பார். இந்த ஆர்வம் இவரைப் பள்ளியிலும் செடிகள் வளர்க்கத் தூண்டியது. இதனால், அங்கும் தாமாகவே மிளகாய், தக்காளி போன்றவற்றை ஆர்வமாக நட்டுப் பராமரித்தார்.
மௌனேஷின் ஆர்வத்தைக் கண்டு வியந்த தலைமை ஆசிரியை அன்புச்செல்வி, சிறுவனின் வீட்டிற்குச் சென்று அவருடைய பெற்றோரிடம் உரையாடினார். அப்போதுதான், சிறுவனுடைய விவசாய ஆர்வம் ஆசிரியருக்குப் புரிந்தது. இதன் பின்னர் மௌனேஷின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு தலைமை ஆசிரியை அன்புச்செல்வி உதவியாகவும், வழிகாட்டியாகவும் மாறினார்.
இந்நிலையில்தான், கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டன. ஏற்கெனவே, விளையாட்டு நேரத்தில்கூட வயல்காட்டில் திரியும் மௌனேஷுக்கு இது கொண்டாட்டமாக மாறியது. ஒவ்வொரு நாள்களையும் தனது தந்தை சுரேஷுடன் விவசாயப் பணிகளிலேயே கழித்தார்.
என்னென்ன பணிகள்:
மௌனேஷின் தந்தை கீரைச் சாகுபடி, கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றைச் செய்வதைப் பார்த்த சிறுவன் தானும் அதையே செய்தான். அப்பாவின் நிழல் போல, அவருடனே ஊரடங்கு நாள்களைக் கழித்தான். தோட்டத்திற்கு பாத்திக் கட்டுவது, கால்நடைகளை அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்க உதவுவது, கீரைகளுக்கு நடுவிலிருக்கும் களைகளை அகற்றுவது, அவற்றை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்வது என அனைத்தும் மௌனேஷுக்கு அத்துப்படி.
இது குறித்து மௌனேஷின் தந்தை சுரேஷ் கூறுகையில், 'என் மகனை நான் கட்டாயப்படுத்தவில்லை. அவனே ஆர்வமாக இந்த ஆறு மாத காலமும் விவசாயம் கற்று வருகிறான். கீரைகளை அறுவடை செய்வது மட்டுமல்ல, உழவுப் பணிகளையும் கூட கற்றுக் கொண்டிருக்கிறான்' என்றார்.
மௌனேஷ் வெறுமனே உதவிகள் செய்து வருகிறார். இது எல்லா குடும்பத்திலும் நடப்பதுதானே? எனக் கேட்டால், 'அப்படியும் சொல்லலாம் தான். ஆனால், இந்த இக்கட்டான சூழலில் கீரை சாகுபடியில் மாதம் மௌனேஷ் எனக்கு பத்தாயிரம் ரூபாய் ஈட்டித் தருகிறார். 10 வயதில் பத்தாயிரம் சம்பாதிப்பது எளிதல்ல தானே’ என்கிறார் சுரேஷ்.
மௌனேஷ் சிறுவயதிலிருந்தே விவசாயம் மீது கொண்ட ஆர்வம் அவரை உழவு பணிகளைத் தனியாளாக மேற்கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தில் பணியாற்றத் தூண்டியுள்ளது. விவசாய குடும்பப் பின்னணி இருந்தாலும் கூட, ஆர்வம் மட்டும்தானே ஒரு செயலுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கமுடியும். தனது சிறு வயதிலேயே விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை செயல்படுத்தி வரும் மௌனேஷ் சக மாணவர்களுக்கு முன்மாதிரி என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க:விதை விருட்சமாய் மாறி சமூகத்திற்கு பயன்படட்டும் - அசோக்குமாரின் பயணம் தொடரட்டும்