ஈரோடு: கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் செப். 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப்பரவல் குறைந்துள்ள நிலையில், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரும் செப்.1.ஆம் தேதி முதல், பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி கட்டாயம்
அதன் ஒருபகுதியாக ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக முதல் தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போடாதவர்களைப் பள்ளி, கல்லூரிகளுக்குள் அனுமதிக்க கூடாது என்றும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக கடந்த ஒரு மாத காலமாக வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல் நிலைப்பள்ளியில் இன்று (ஆக.29) ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமிற்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முகாமில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் அவசர அவசரமாக பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக்கூடாது என எய்ம்ஸ் பேராசிரியர் கரோனா மூன்றாவது அலையை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளதால், பள்ளி, கல்லூரிகள் உரிய தேதியில் திறக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: குடியிருப்பு பகுதிகளில் மருத்துவக் கழிவுகள்: பொதுமக்கள் புகார்