ஈரோடு: சட்டமன்றத்தில் தமிழ்நாடு நலன் கருதி நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளதைக் கண்டித்தும், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான சுவரொட்டியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சத்தியமங்கலம் பகுதியில் ஒட்டி உள்ளனர். இந்த நிலையில் அனுமதி பெறாமல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக கூறி போலீசார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சத்தியமங்கலம் டிஎஸ்பி (பொறுப்பு) நீலகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து டிஎஸ்பி பொறுப்பு நீலகண்டன் கூறுகையில், ’சுவரொட்டி ஒட்டுவதற்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும், அனுமதி பெறாத காரணத்தினால் புளியம்பட்டி - பவானிசாகர் தாளவாடி ஆகியப் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, போலீஸ் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி நீலகண்டன் போராட்டம் நடத்தியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முன் அனுமதி பெற்று சுவரொட்டி ஒட்டுமாறு அறிவுறுத்திய நிலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: TNPSC: குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2450 பணியிடங்கள்.. ஜனவரியில் தேர்வு முடிவு!