ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 274 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித் தொகை ஆணைகள் ஆகியவற்றை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்பொழுது, பேசிய அவர், "முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளினால் அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்துவருகின்றன. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்னும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போது மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவது போல் அடுத்த மாதத்திற்குள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ 2,000 வழங்கப்படும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "மாணவர்களின் நிலைகளை மனதில்கொண்டு இந்தாண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கின்ற 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் இம்மாதம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும். 2017 - 18 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும். மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு ஆங்கிலத்தைக் கற்றுத்தரும் வகையில் தமிழோடு சேர்ந்து ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கும் திட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.
இம்மாத இறுதிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்குத் தனி தொலைக்காட்சி தொடங்கப்படும் மலேசியா நாட்டிலிருந்து பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்த புதிய திட்டங்களுடன் அறிஞர்கள் நாளை மறுதினம் சென்னை வரவுள்ளனர். அதில் அனைத்து மாணவர்களுக்கும் டேப் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது. யூ-ட்யூப் பாடத்திட்டம் அடுத்த மாதத்தில் உருவாக்கவுள்ளோம்.
அதில் வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ-ட்யூப்பில் பதிவேற்றம் செய்யப்படும். ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு இந்தாண்டில் காலணிக்குப் பதில் ஷூ வழங்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்" என்றார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் கவிதா, வருவாய்த் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.