ஈரோடு: அரச்சலூர் அருகே காகதன் வலசு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்கிற கோபால் என்பவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்தார்.
நேற்று (ஜுலை.03) காலை ரமேஷ் சாராயம் ஊறல் போட்டு விற்று வருவதாக அரச்சலூர் காவல் நிலைய சிறப்பு தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் அரச்சலூர் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஈரோடு மாவட்டத்தின் காக்காதன் வலசு கிராமத்தில் விவசாயம் செய்வதாக கூறி நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, அங்கு கோபால், பாஸ்கரன் உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் தங்கி சாராயம் ஊறல் போட்டு பெரிய அளவில் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 5 பேரலில் இருந்த 450 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், சாராயம் ஊறல் போட்டு விற்பனை செய்துகொண்டிருந்த கோபால், பாஸ்கரன் ஆகிய இருவர் மீதும் அரச்சலூர் காவல் நிலைய மதுவிலக்கு காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.