ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:
மருத்துவப் படிப்பிற்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஆந்திராவையோ கேரளாவையோ கவனிக்க வேண்டியது இல்லை. மாணவா்களையும் பெற்றோா்களையும் கவனிக்கின்ற அரசு இந்த அரசு என்ற முறையில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகிற நவ. 9ஆம் தேதி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து முதலமைச்சரிடம் சமர்ப்பித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவா்களின் நலன்கருதி பல்வேறு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பல்வேறு கருத்துகள் வந்ததன் அடிப்படையில்தான் முழுமையான கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதைத் தொடா்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பாா்.
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம்.
நீட் தேர்வு பயிற்சி நேற்று தொடங்கியுள்ளது. இதில் 15,492 பேர் பயிற்சி பெற உள்ளனர்.
இன்னும் சேரவிருக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
அடுத்தாண்டு பொதுத்தோ்வு ரத்தாகுமா என்ற கேள்விக்கு, "அது யோசிக்க வேண்டிய ஒன்று, துறை என்ன சொல்கிறது என்று தொிந்துதான் தொிவிக்க முடியும். அரசுப் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் ஆய்வுசெய்வார்" எனத் தெரிவித்தார்.