ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை பெற்ற விவகாரத்தில், சுதா மருத்துவமனையின் ஸ்கேன் மையத்திற்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர். இதனைத்தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தினர் நீதிமன்றத்திற்கு சென்று சீலை அகற்ற உத்தரவு பெற்றனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கு சென்றது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு வைத்த சீல் செல்லும் என உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, ஈரோடு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி, மாவட்ட குடும்ப நல இணை இயக்குநர் ராஜசேகர் தலைமையிலான சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், சுதா மகப்பேறு மருத்துவமனையில் உள்ள செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்திற்கு நேற்று (ஆக. 6) இரண்டாவது முறையாக சீல் வைத்தனர். மேலும் ஸ்கேன் சென்டர் அங்கீகாரத்தை ரத்து செய்யும் கடிதத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை அலுவலர்கள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேம குமாரி,"மருத்துவமனை ஸ்கேன் சென்டர் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து 46 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 48 நோயாளிகள் நாளை (அதாவது இன்று) மதியத்திற்குள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி விடுவதாக உறுதி அளித்துள்ளனர். அனைத்து நோயாளிகளும் வெளியேற்றிய பிறகு மருத்துவமனை வளாகம் முழுவதும் சீல் வைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே அவசர கதியில் மருத்துவமனை வளாகம் முழுவதும் சீல் வைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு மறுபரீசிலினை செய்ய வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் என அமைச்சர் முத்துசாமியை 600-க்கும் மேற்பட்டோர் சந்தித்து வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "கருமுட்டை விவகாரத்தில் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மருத்துவமனை சீல் வைக்கப்பட்டது. இதில், அரசுக்கு எந்த வித உள்நோக்கமும் இல்லை. சீல் வைக்கபட்டதில் உடன்பாடு இல்லை. இதில் சில சட்டத்திருத்தம் தேவை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கருமுட்டை விவகாரம்: சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!