சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் அதிநவீன கேமராக்கள், பைனாகுலர், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றைப் பயன்படுத்தி அண்மையில் பட்டாம்பூச்சிகள் குறித்த கணெக்கெடுப்பு நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலுள்ள 10 வனச்சரகங்களில் 20 குழுக்கள் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டன.
வண்ணத்துப்பூச்சியின் அடையாளம், அளவு, வண்ணம், பறக்கும் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பில் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
மகரந்த சேர்க்கை மூலம் தாவரங்களின் வளர்ச்சிக்கு வண்ணத்துப்பூச்சிகள் பெரும் பங்காற்றுவதோடு, அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வதால் காடுகள் மேம்படும். வண்ணத்துப்பூச்சிகளில் காமன்குரே, புளு டைகர், டார்க் புளு டைகர், லைன் பிராண்டு குரே, காமன் எமிகிரண்ட், ட்பிள் பிராண்டு என ஆறு வகைகள் உள்ளன.
ஒரு வண்ணத்துப்பூச்சி தாவரங்களில் 100 முட்டைகளை இடும். முதலில் புழுவாக உருவாகி படிப்படியாகப் பூச்சியாக மாறும். வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு குறித்துப் பேசிய தமிழ்நாடு இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பின் இயக்குநர் அ.பா. வேந்தன், "வண்ணத்துப்பூச்சியானது ரசாயனக் கலப்படம் இல்லாத விவசாய நிலங்கள், குளிர் பிரதேசங்களில் வாழும் தன்மையுடையது.
லைன் வண்ணத்துப்பூச்சி, காமன் எமிகிராண்ட் ஆகிய இருவகைகள்தான் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 325 வண்ணத்துப்பூச்சிக் குடும்பங்களும், இந்திய அளவில் 1,318 குடும்பங்களும் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் லட்சக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் இருக்கும். பருவமழை, கோடை மழையால் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: முடிவுரையை நோக்கி கைத்தறி தொழில் - கடைசி தலைமுறையையாவது காப்பாற்றுமா அரசு?