சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரிலிருந்து கேர்மாளம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. தற்போது கோடையின் வெப்பம் காரணமாக வனத்தில் செடி, கொடிகள் காய்ந்துக்கிடக்கின்றன.
இந்நிலையில், கேர்மாளம், காப்புக்காடு, கெத்தேசால், மாவள்ளம், கோட்டாரை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சாலையோர வனப்பகுதியில் பரவியது. இதனால் ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த வனப்பகுதி வழியாக மலைகிராமங்களுக்கு மின்பாதை செல்கிறது. இந்த காட்டுத்தீயால் மின்கம்பி மற்றும் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், கெத்தேசால், பூதாளபுரம், காணக்கரை, காடட்டி, சுஜில்கரை, திங்களூர் பேன்ற 15க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால், மின்சாரம் இல்லாமல் மலைகிராமங்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் ஆசனூரிலிருந்து கேர்மாளம் வழியாக கொள்ளேகால் செல்லும் வழித்தடத்தில் பேருந்து மற்றும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரேப்பாளையத்தில் உள்ள வனச்சோதனைச்சாவடி மூடப்பட்டது.
மேலும், இன்று காலை முதலே இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கொள்ளேகால், கெத்தேலசால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டிருந்த போதிலும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். தீ அணைக்கப்பட்ட வனப்பகுதியில் மின்கம்பம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இயல்பு நிலை திரும்புவதற்கு ஒரிரு நாட்கள் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.