ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலுக்கு, பாசனத்திற்காக 2300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது, 124 மைல் தூரத்தில் உள்ள காங்கேயம் வரையுள்ள கடைமடை வாய்க்காலுக்குச் சென்றடையும்.
இந்நிலையில் முழு கொள்ளளவான 2300 கனஅடி நீர் வாய்க்காலில் சென்றபோது, அணையில் இருந்து உக்கரம் வாய்க்கால் கரையில் ஏற்பட்ட சிறிய துவாரம் வழியாக வாய்க்கால் நீர், தோட்டங்களில் புகுந்தது.
இதைப் பார்த்த விவசாயிகள், பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அங்கு வந்த அலுவலர்கள், தண்ணீரின் அளவை 1000 கனஅடியாக குறைத்து வாய்க்காலில் ஏற்பட்ட கசிவுநீரை தடுத்து துவாரத்தை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். கான்கிரீட், செம்மண்ணைக் கொண்டு கரையை பலப்படுத்தியதையடுத்து மீண்டும் வாய்க்காலில் தண்ணீர், 1000 கனஅடியில் இருந்து படிப்படியாக 2200 கனஅடியாக உயர்த்தப்பட்டது.