ஈரோடு, சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அங்குள்ள குரங்குகளுக்கு பழங்கள், கார வகை தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்களை கொடுக்கின்றனர். இதனால், குரங்குகளும் காரில் செல்வோரிடம் தின்பண்டங்களை வாங்குவதற்காக சாலையின் நடுவே நடமாடுகின்றன. இதன்காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு குரங்குகள் உயிரிழக்கும் சோகச் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இதனால், குரங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என ஆங்காங்கே வனத்துறையினர் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர். ஆனால்,இதனைப் பொருட்படுத்தாது வாகன ஓட்டிகள் வனத்துறையினரின் அறிவிப்பை அலட்சியப்படுத்திவிட்டு குரங்குகளுக்கு உணவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவு அளிக்கும் வாகன ஓட்டிகளை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.