ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவ்வப்போது யானைகள் விவசாயத் தோட்டத்துக்குள் புகுவதும், வனத்துறையினரே அதனை விரட்டியடிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, காம என் புரம் கிராமத்தில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் யானை அங்கிருந்து நகராமல் அதே இடத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. பின், யானை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் காட்டுக்குள் செல்லாமல் அதே இடத்தில் இருப்பதும் தெரிய வந்தது.
யானையின் உடல் நலம் குறித்த ஆய்விற்குப் பின்னரே காட்டுக்குள் அனுப்புவதா அல்லது அதே இடத்தில் சிகிச்சை அளிப்பதா என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
யானையை விரட்டும் பணி சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: துரத்திய கொம்பன் - பயத்தில் மரத்தில் ஏறிய வன அலுவலர்!