சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் பிட்டுத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று கோயிலில் பிட்டுத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் பார்வதிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏன் பிட்டுத் திருவிழா?
வந்தி என்ற மூதாட்டிக்கு கூலியாளாக அவதாரம் எடுத்துவந்த சிவன், கூலிக்குப் பதிலாக பிட்டு வாங்கித் தின்றுவிட்டு விட்டு உண்ட மயக்கத்தில் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார்.
அப்போது அங்கு வந்த பாண்டிய மன்னன் கூலியாள் வேடத்தில் வந்திருப்பது சிவன் என்று அறியாமல் சிவனை அடித்து உதைத்து, வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சேதமடைந்த கரை அடைப்பைச் சரிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிவபெருமான் மண் சுமந்து மன்னன் குறிப்பிட்ட கரை அடைப்பை அடைத்தார்.
இந்தப் புராண நிகழ்ச்சியான சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து கரையை அடைத்த நிகழ்வு கோயிலில் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோயிலில் அன்பிற்பிரியாள் அம்மன், சிவபெருமான், பார்வதிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி தகுந்த இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம்செய்தனர்.