ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தாளவாடி அருகே உள்ள பாரதிபுரம் அடுத்த அட்லிபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஷ் ( 42 ). இவர் 30 ஆடுகளை பராமரித்து வருகிறார். தினந்தோறும் மேய்ச்சலுக்குப் பின் தனது வீட்டின் அருகிலுள்ள ஆட்டுப் பட்டியில் ஆடுகளை அடைத்து விடுவார்.
இந்நிலையில் ஆட்டுப் பட்டியிலிருந்த ஆடுகள் கதறும் சத்தத்தைக் கேட்ட வெங்கடெஷ், ஆடுகள் இருக்கும் இடத்தில் டார்ச் அடித்து பார்த்தபோது ஆட்டை கடித்தப்படி சிறுத்தை நிற்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்து சிறுத்தையை அங்கிருந்து துரத்தினர். அதனைத் தொடர்ந்து ஆட்டுப்பட்டியில் பார்த்தபோது நான்கு ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக இரு மாநில வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் கால் தடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று ஆடுகளை குறிவைத்து வேட்டையாடுவதால், இரு மாநில எல்லையில் குடியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புலி அட்டகாசம்: நடவடிக்கை எடுக்காத வனத்துறை மீது மக்கள் சீற்றம் !