ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஏலம் எடுத்து பேக்கரி, செல்போன் கடை, பேன்சி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வியாபாரிகள் நடத்தி வருகின்றனர்.
வியாபாரம் பாதிப்பு
கரோனா ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து நிறுத்தம், கடைகள் மூடப்பட்டதால் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் கடை ஏலம் எடுத்து வியாபாரம் செய்து வந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் கடந்த (ஜூலை 5) ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன. இருப்பினும் பயணிகள் வருகை குறைவால் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சத்தியமங்கலம் பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
முதலமைச்சரிடம் கோரிக்கை
இதனால் பேருந்து நிலை வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் இல்லாமல் கடை உரிமையாளர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வணிக வளாக கடைக்காரர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் கடை வாடகை தள்ளுபடி செய்யப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு ' உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் கடை வாடகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனு அளித்தோம்.
மேலும் முதலமைச்சர் இதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக பேருந்து நிலைய வணிக வளாக கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிடப்பில் போடப்பட்ட அரசாணை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கணினி உதவியாளர்கள் வேதனை!