ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பனிக்காலத்தில் பூக்களின் வரத்து குறைவாகவும், கோடைகாலத்தில் பூக்களின் வரத்து அதிகரித்தும் இருக்கும். இதற்கிடையே ஊரடங்கு காரணமாக பூக்கள் பறிக்கப்பட்டு, விற்க முடியாமல் கடந்த 60 நாட்களாக விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்நிலையில் 60 நாட்களுக்குப் பிறகு, சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட் இயங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அண்மையில் பூ விவசாயிகளின் துயரத்தைப் போக்க தமிழ்நாடு அரசு நறுமணத் திரவியங்கள் தயாரிக்கும் ஆலையை மீண்டும் தொடங்க அனுமதி அளித்தது. தொடக்கத்தில் நறுமணத் திரவியங்கள் தயாரிக்கும் ஆலைகள் பூக்களை கிலோவிற்கு 70 ரூபாய் வரை கொள்முதல் செய்த நிலையில், படிப்படியாக குறைத்து 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர்.
இதனால் மீண்டும் பூ மார்க்கெட்டை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து, பூக்களின் விலை உயர நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாகவும், விவசாயிகள் முகக் கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் பூ மார்க்கெட் நடத்துமாறு அனுமதி அளித்தது.
இதன்படி விவசாயிகள் இன்று பூக்களை பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். இதுவரை ரூ.50-க்கு விற்கப்பட்ட பூக்கள், இன்று மூன்று மடங்கு உயர்ந்து, கிலோ 200-க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் கிலோ ஒன்றுக்கு ரூ. 50-க்கும் குறைவாக விற்கப்பட்ட முல்லை இன்று ரூ.140க்கும், சாதி முல்லை ரூ.150க்கும், கனகாம்பரம் ரூ.200-க்கும் விற்கப்பட்டது.
தற்போது ஈரோடு, கோவைக்கு மட்டுமே பூக்கள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவது போல, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் பூக்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் விமானம் மூலம் பூக்கள் வெளிநாட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது விமானத் தடையால் பூக்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விமான சேவையின்போது பூக்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'உழவர் சந்தைகள் நாளை முதல் பழைய இடத்திலேயே இயங்கும்' - ஈரோடு மாநகராட்சி