ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உத்தண்டியூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏழு பேர் போட்டியிட்டனர்.
முன்னதாக, பவானிசாகர் தேர்தல் நடத்தும் அலுவலர் மைதிலி கட்சி சார்பின்றி பணம் வாங்காமல் தேர்தலில் வாக்களிக்கவும், தேர்தல் விதிமுறைகளை மீறி நடக்கும் கட்சிகள் மீது புகார் தெரிவிக்கவும் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கி, அதில் அப்பகுதி இளைஞர்கள் 100க்கும் மேற்பட்டோரை இணைத்துள்ளார்.
இதன் காரணமாக இளைஞர்களும் பொதுமக்களும் வாக்குக்கு பணம் பெறுவதை கண்டித்து பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில், உத்தண்டியூர் ஊராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று முன்தின இரவு முதல் அதிகாலை வரை ஒரு ஒட்டுக்கு 500 ரூபாய் வழங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இளைஞர்கள் சிலர் பணப்பட்டுவாடா செய்வதை வீடியோ எடுத்து தேர்தல் அலுவலர் உருவாக்கிய வாட்ஸ்அப் குழுவில் அனுப்பியுள்ளனர். இந்த வீடியோ கிராமம் முழுவதும் வைரலாக பரவியதையடுத்து வீடியோ உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
ஓட்டுக்கு பணம் எச்சரிக்கும் சுவரொட்டி: பட்டையை கிளப்பிய இளைஞர்கள்!