மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்துறையில் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
![sanjay dutt critisized bjp on rafale deal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-01-congress-sanjay-dutt-script-vis-byte-7205221_09102019192002_0910f_1570629002_896.jpg)
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
'ரஃபேல் போர் விமானம் வாங்கியதாக பாஜக கூறிவருவது மக்களை ஏமாற்றும் நாடகம் என்றும்; ரஃபேல் விமானத்தை இந்தியா கொண்டுவர இரண்டு வருடங்கள் ஆகும் எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் மக்களை ஏமாற்ற பாஜக அரசு இத்தகைய நாடகத்தை அரங்கேற்றி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றும்; அதிமுக அரசின் பொய் வாக்குறுதிகள் எடுபடாது என்றும் கூறினார். அதிமுக அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்டுவித்தலுக்கு ஏற்ப தலையசைத்து வருவதாகவும்; தமிழகத்தின் நலனில் அக்கறை செலுத்தாமல் ஊழல் ஒன்றையே முதன்மைக் குறிக்கோளாக வைத்து செயல்பட்டுவருவதாகவும் சாடினார்.
ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு மத்திய பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்றவர், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியை கண்டு சென்றனர்.
மேலும் படிக்க: சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சி