ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோயில் திருவிழா, திருமணத்திற்கு தேவையான மாலை, மணவறை அலங்காரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கிய இடம்பிடிக்கும் சம்பங்கி பூ ஓரளவு நல்ல லாபம் தரும் பயிராக உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சம்பங்கி பூவை விரும்பி பயிரிடுகின்றனர்.
இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் விடப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கொச்சின், திருவனந்தபுரம், பெங்களுரூ, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சம்பங்கி பூ விலை கிலோ ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.40 வரை மட்டுமே விற்பனையானது.
தற்போது வைகாசி மாதம் வளர்பிறை முகூர்த்த சீசன் என்பதால் சம்பங்கி பூ விலை கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ரூ.50க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ.160க்கு விற்பனையானது. சம்பங்கி பூ அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.