ஈரோடு: சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் சம்பங்கி பூக்களை பறித்து சத்தியமங்கலம் தனியார் பூ மார்க்கெட்டில் ஏலமுறையில் விற்று வருகின்றனர்.
கடந்த வாரம் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு கிலோ ரூ.220 வரை ஏலம் எடுத்தனர். சம்பங்கி பூக்கள் பெரும்பாலும் கோவில்கள் மற்றும் திருமண விழாக்களில் பயன்படுத்துவர்கள். தற்போது முகூர்த்த தினம் மற்றும் கோவில் விழாக்கள் இல்லாததால் சம்பங்கி விலை கிலோ ரூ.220 இல் இருந்து கிலோ ரூ.20 ஆக சரிந்தது.
இன்று(அக்.11) 15 டன் வரை பூக்கள் வரத்து வந்த நிலையில் 7 டன் பூக்கள் மட்டுமே கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது. மழையின் காரணமாக மீதமுள்ள 8 டன் பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை. இதனால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் ரூ.3 லட்சம் மதிப்பிலான 8 டன் சம்பங்கி பூக்களை பறித்து பெரியகுளம் பகுதியில் விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனர்.
வியாபாரிகள் சம்பங்கி பூக்களை வாங்க முன்வராத நிலையில் கட்டுபடியான விலைக்கு அரசு கொள்முதல் செய்து வாசனை திரவிய ஆலைகளுக்கு அனுப்பி விவசாயிகள் வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்ய இயற்கை எரிவாயு நிலையம்; முதலமைச்சர் திறந்து வைத்தார்